தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல்துறை திறமைகள் கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தனித்துவமான இசையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின்னர் நான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தனது 25வது திரைப்படமாகிய சக்தித் திருமகன் படத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் குறித்து விஜய் ஆண்டனி ஒரு பழைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
“ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். ஒருநாள், தனுஷுக்கு இசையில் ஆர்வம் இருப்பதால் உதவுமாறு ஐஸ்வர்யா கூறினார்.
பிறகு தனுஷ் என்னைச் சந்திக்க வந்தார். அப்போது, எதையாவது சாமான்யமாக இசையமைத்து ஏமாற்றிவிடலாம் என நினைத்தேன். ஆனால், தனுஷுக்கு இசை பற்றிய நல்ல அறிவு இருந்தது. அதனால், அவர் வரும்போதெல்லாம் எனக்குப் பயமாகத் தோன்றியது. கடைசியில் அவர் கேட்டதை இசையமைத்துக் கொடுத்தேன்” என விஜய் ஆண்டனி சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.