நாகை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், வரும் 20ஆம் தேதி நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி காவல்துறை சார்பில் வழங்கப்பட்டாலும், பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் திருச்சியில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய கூட்ட நெரிசல் காரணமாக, இம்முறை காவல்துறை அதிக கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. திருச்சியிலிருந்து மரக்கடை வரை விஜய் சென்ற பயணமே 5 மணிநேரத்திற்கு மேலாக நீண்டிருந்தது. அதன்பின் குன்னம், அரியலூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நேரக்குறைவால் பெரம்பலூர் பயணத்தை குறைத்துக்கொண்டார்.
இந்த அனுபவத்தை முன்னிட்டு, விஜய் தனது பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்து, ஒருநாளில் மூன்று மாவட்டங்களுக்கு பதிலாக இரண்டு மாவட்டங்களில் மட்டுமே நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
நாகை பிரச்சாரத்திற்கான அனுமதி மனு, மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் காவல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஏழு இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், புத்தூர் ரவுண்டானா பகுதியே பிரச்சார இடமாக தேர்வு செய்யப்பட்டது.
காவல்துறை விதித்த நிபந்தனைகளின்படி, விஜய்க்கு நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் நாகூர் நகரம் வழியாக அமிர்தா வித்யாலயா சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியே புத்தூர் ரவுண்டானா சென்றடைந்து அங்கு பொதுமக்களைச் சந்திக்க உள்ளார். அதன் பின் சிக்கல், கீழ்வேளூர் வழியாக விஜய் திருவாரூர் மாவட்டத்தை நோக்கி பயணிப்பார்.
நாகை நகருக்குள் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிரச்சாரம் செய்ய காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டம் அதிகரித்தால் தன்னார்வலர்கள் மூலம் ஒழுங்கு பேணப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஆலோசனைக்குப் பிறகே இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















