சுற்றுலாத் தலமான வால்பாறையின் மிக முக்கியப் போக்குவரத்து மையமாக விளங்கும் காந்திசிலை பேருந்து நிலையம், தற்போது விதிமுறை மீறிய வாகன நிறுத்தங்களால் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இங்கிருந்துதான் சின்கோனா, ஷேக்கல்முடி, முடீஸ், சோலையார் டேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் உட்பகுதிகளில், அனுமதியின்றி ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வேன்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், குறுகலான பாதையைக் கொண்ட இந்தப் பேருந்து நிலையத்திற்குள் அரசுப் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் உள்ளூர் இருசக்கர வாகனங்கள் பேருந்து நிறுத்தப் பகுதிகளிலேயே ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பேருந்துகள் சாலையிலேயே நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதன் விளைவாகப் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். “ஏற்கனவே இடநெருக்கடி மிகுந்த இந்த மையத்தில், தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வந்து செல்ல முடிவதில்லை. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றி அபராதம் விதிக்க வேண்டும்,” எனப் பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து வால்பாறை காவல்துறையினர் கூறுகையில், “காந்திசிலை பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் வாகனங்கள் நிறுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் போக்குவரத்துப் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது உடனடி அபராதம் விதிக்கப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்; மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்துள்ளனர். வால்பாறையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண, பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
