தட்சிண துவாரகையில் வைகுண்ட ஏகாதசி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் வைரமுடியுடன் சொர்க்கவாசல் எழுந்தருளல்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், ‘தென்னகத்து தட்சிண துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுவதுமான மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. சுமார் 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில், பிரம்மாண்டமான கோபுரங்கள் மற்றும் கலைநயமிக்க மண்டபங்களுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா இக்கோவிலில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி வைபவம் இன்று டிசம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி ‘பகல் பத்து’ உற்சவம் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில், ராஜகோபாலசாமி நாள்தோறும் ஒரு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கல்யாண திருக்கோலம், கிருஷ்ண அலங்காரம், ரத்தினக் கிரீடம், ஸ்வர்ண வைரமுடி சேவை, ராமாவதாரம், விஜயராகவ நாயக்கர் திருக்கோலம், மூலவர் புஷ்பாங்கி சேவை, ராஜா அலங்காரம், மாடு மேய்க்கும் கோலம், பரமபதநாதன் சேவை மற்றும் திருமங்கையாழ்வார் திருவடி தொழல் எனப் பல்வேறு அவதாரங்களில், சத்தியபாமா மற்றும் ருக்மணி சமேதராக ராஜகோபாலசாமி காட்சியளித்தது பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை, ராஜகோபாலசாமி சத்தியபாமா மற்றும் ருக்மணியுடன் ராஜா அலங்காரத்தில், மின்னும் வைரமுடி சூடி சன்னதியிலிருந்து புறப்பட்டார். மேளதாளங்கள் முழங்க, கோயிலின் உட்பிரகாரம் வழியாக வலம் வந்த சுவாமி, சொர்க்கவாசல் மண்டபத்தை அடைந்து திருக்கோட்டகையில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த புனிதமான நிகழ்வில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா. காமராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வில் தரணி நிறுவனங்களின் நிறுவனர் எஸ். காமராஜ், அதிமுக நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார், தரணி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் விஜயலட்சுமி காமராஜ், தேசிய மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ். சேதுராமன் உட்படப் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காகக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருடா சி. இளவரசன் மற்றும் செயல் அலுவலர் எஸ். மாதவன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செங்கமலம் யானையின் பாகன் மற்றும் கோயில் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் தரிசன முறைகளைச் சீர்செய்தனர். மன்னார்குடி நகரே விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

Exit mobile version