மதுரை மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம் மிக விமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாதத்தின் கடும் பனியையும் பொருட்படுத்தாமல், “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்திப் பரவசத்துடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் முழக்கங்களுக்கு இடையே, கள்ளழகர் என்ற சுந்தரராச பெருமாள் பரமபத வாசல் வழியாகப் பிரவேசித்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பகல் பத்து’ உற்சவத்துடன் தொடங்கி, தினசரி உள் பிரகாரப் புறப்பாடுகளுடன் களைகட்டிய நிலையில், இன்று அதன் உச்ச நிகழ்வான சொர்க்கவாசல் திறப்புடன் ‘ராப்பத்து’ உற்சவம் இனிதே தொடங்கியது.
இன்று அதிகாலை 6.15 மணி அளவில், மேளதாளங்கள் முழங்க, வர்ணக் குடைகள் மற்றும் தீவட்டி பரிவாரங்கள் முன்னே செல்ல, சுந்தரராச பெருமாள் சர்வ அலங்காரத்தில் பரமபத வாசல் நோக்கிப் புறப்பட்டார். வைகுண்ட ஏகாதசியின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும், நம்மாழ்வார் பரமபத வாசல் அருகே பெருமாளை எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்வு பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பரமபத வாசல் திறக்கப்பட்டதும், பெருமாள் அதன் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து, பின்னர் அங்குள்ள சயன மண்டபத்தைச் சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். நம்மாழ்வாருக்குப் பெருமாள் காட்சியளிக்கும் இந்த நிகழ்வு, ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் தத்துவத்தை விளக்கும் விதமாக அமைந்திருந்தது.
தொடர்ந்து, சயன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு விசேஷ தீபாராதனைகளும், மகா அபிஷேகங்களும் நடைபெற்றன. வைரக் கிரீடம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து அருள்பாலித்த சுந்தரராச பெருமாளைத் தரிசிக்க மதுரை மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் யக்ஞநாராயணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னின்று செய்திருந்தனர். பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கவும் அப்பன் திருப்பதி போலீசார் தலைமையில் பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

















