ஏப்ரலில் திறக்கப்படும் வடுகப்பட்டி-ராஜபாளையம் நான்கு வழிச்சாலை: விபத்தில் லாபயணத்திற்கு சென்டர் மீடியன் கிராஸிங் இல்லாத புதிய வடிவமைப்பு!

மதுரை – கொல்லம் இடையேயான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் வகையில், வடுகப்பட்டி முதல் ராஜபாளையம் வரையிலான 35.6 கிலோ மீட்டர் தூர புதிய நான்கு வழிச்சாலை வரும் ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. தென் தமிழகத்தின் மிக முக்கிய போக்குவரத்துத் தடங்களில் ஒன்றான மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை (NH 744) தரம் உயர்த்தும் இந்தத் திட்டத்தில், விபத்துகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் பொருட்டு, சாலைகளுக்கு இடையே ‘சென்டர் மீடியன் கிராஸிங்’ (Center Median Crossing) எதுவும் இல்லாமல் அமைக்கப்படுவதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 2023 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திட்டத்தில், திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரையிலான 71.6 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.1,318 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகள் திருமங்கலம் – வடுகப்பட்டி மற்றும் வடுகப்பட்டி – ராஜபாளையம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் வடுகப்பட்டி முதல் கிருஷ்ணன்கோவில் வரையிலான தற்போதைய சாலையே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணன்கோவில் முதல் ராஜபாளையம் இடையே மட்டும் 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு முற்றிலும் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வழித்தடத்தில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய 2 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு பெரிய மேம்பாலம் மற்றும் 19 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கிராமப்புற மக்கள் மற்றும் சிறிய வாகனங்கள் சாலையைக் கடக்க ஏதுவாக 16 சுரங்கப்பாதைகளும் (Underpasses), 62 நீர்வழிப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலையின் திறப்பானது ராஜபாளையம், தென்காசி மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதிகளுக்குச் செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மிக விரைவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version