சென்னை : தமிழகத்தில் தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கம் காரணமாக இந்திய தங்க விலையில் தொடர் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (செப் 21) தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10,290, சவரனுக்கு ரூ.82,320 என்ற அளவில் விற்பனையானது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை மூடப்பட்டிருந்ததால், தங்கம் முந்தைய விலையிலேயே விற்கப்பட்டது. ஆனால், நேற்று காலை விலை உயர்ந்து, ஒரு கிராமுக்கு ரூ.10,360, சவரனுக்கு ரூ.82,880 ஆக விற்பனையானது. மதியம் மீண்டும் உயர்வு ஏற்பட்டு, ஒரு கிராம் ரூ.10,430, சவரன் ரூ.83,440 என விலை பதிவானது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வை தங்கம் சந்தித்தது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.84,000, கிராமுக்கு ரூ.10,500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்க விரும்பும் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
