2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், பாஜகவும் தனது அமைப்புசார் பணிகளை வலுப்படுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், சமீபத்தில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதேவேளை, பாமக, தேமுதிக, ஓ.பி.எஸ். அணி போன்ற கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் மதுரையில் நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு 21ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மக்களிடம் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தனித்த வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல்லையில் பாஜக பூத் முகவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. முதலில் இந்த மாநாடு ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், பாஜக மூத்த தலைவர் மற்றும் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவையொட்டி, அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
புதிய திட்டப்படி, அந்த மாநாடு ஆகஸ்ட் 22ஆம் தேதி நெல்லையில் நடைபெற உள்ளது. இதில் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பங்கேற்கிறார்.
















