திருவள்ளூர் அருகே
2 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தது
நகை, பணம், அத்தியாவசிய ஆவணங்கள் எரிந்து நாசம்
திருவள்ளூர் எம்எல்ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு
அரிசி மளிகை பொருட்கள் வெட்டி சேலை வழங்கினார்:
15 நாட்களில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை:
எம்எல்ஏ உறுதி:
திருவள்ளூர், மே 31: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி காருண்யா நகரில் 35-க்கும் மேற்பட்ட இருளர் இன மற்றும் பழங்குடியின மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பட்டறை கிராமம் குளக்கரை பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வந்த நிலையில் சாலை விரிவாக்கம் காரணமாக இந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு காருண்யா நகர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
தென்னை ஓலை குடிசை அமைத்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி, தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு குடியிருக்கும் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி முனியம்மாள் என்பவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. அதேபோல் கடந்த 20-ம் தேதி மாணிக்கம் என்பவரின் குடிசை வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து புகார் கொடுத்தும் காவல்துறை சார்பிலும் வருவாய் துறை சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அனுஷா, சங்கர் ஆகிய இரண்டு பேரின் வீடுகளும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 26 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு சவரன் நகை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் குழந்தைகளின் பாட புத்தகம் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.அருண்குமார், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்தப் பகுதி மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதால்
இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை என வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதனையடுத்து மாற்று இடத்தில் குடியிருக்க அனைத்து வசதிகளும் 15 நாட்களில் ஏற்படுத்தி தரப்படும் என எம்.எல்.ஏ., டாக்டர் டி.அருண்குமார் உறுதியளித்தார்.
மேலும் அரசு சார்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 5 குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள், வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கினர்.
இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 15 நாட்களில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்து இருப்பதால் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் ஆர் சசிகுமார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் வழங்கினார்.
