சத்தீஸ்கர் மாநிலத்தில் மதமாற்றம் மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளை விடுவிக்கக் கோரி, நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜூலை 26ஆம் தேதி, அசிசி சகோதரிகள் மேரி இம்மாகுலேட் அமைப்பைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரி ஆகியோர், நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு இளைஞருடன் துர்க் ரயில் நிலையத்தில் பயணித்தனர். அதில், மூன்று பெண்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறியதையடுத்து, காவல்துறையினர் இரண்டு கன்னியாஸ்திரிகளை கைது செய்தனர்.
பின்னர், பஜ்ரங் தளம் சார்பில் ஜோதி சர்மா தலைமையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில், கன்னியாஸ்திரிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம், 1968 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ஆகஸ்ட் 8 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகளுடன் இருந்த மூன்று பெண்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.
“பொய்யான குற்றச்சாட்டுகள்” – கத்தோலிக்க அமைப்புகள் குற்றச்சாட்டு
ராய்ப்பூர் மறைமாவட்டத்தின் விகார் ஜெனரல் பாதிரியார் செபாஸ்டியன் தெரிவித்ததாவது: “அந்த மூன்று பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே. அவர்களது பெற்றோரிடமிருந்து அனுமதி பெற்றுப் பணிக்காக ஆக்ரா கான்வென்ட்களுக்கு அழைத்து செல்லப்பட்டது. இது தன்னிச்சையானது.”
இதை தொடர்ந்து, கேரளா கத்தோலிக்க ஆயர் குழுவின் கேசிபிசி விஜிலென்ஸ் ஆணையம், “இது கட்டாய மதமாற்றம் தொடர்பான பொய்யான வழக்கு. இது மத சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கை. இந்த வகை துன்புறுத்தல்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் கண்டனம்
கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியுக்கு கடிதம் எழுதி இந்த விவகாரத்தில் தலையிட்டு, கன்னியாஸ்திரிகளுக்கு நியாயம் கோரியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரான இது, வகுப்புவாதத்தின் ஆபத்தான வெளிப்பாடாகும்” என கண்டனம் தெரிவித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சியின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கை. மத சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை. கன்னியாஸ்திரிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
விவாதத்திற்குள்ளாகும் மத சுதந்திரச் சட்டம்
ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் வெளியிட்டுள்ள தரவின்படி, 2014இல் 127 மத அடிப்படையிலான தாக்குதல் வழக்குகள் இருந்த நிலையில், 2024இல் அது 834 ஆக உயர்ந்துள்ளது. இது மத சிறுபான்மையினருக்கு எதிரான அழுத்த நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்பதை காட்டுகிறது எனவே, இந்த விவகாரம் தேசிய அளவில் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.