விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழமையான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரண்டு காவலாளிகள் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தூர் அருகே அமைந்துள்ள இந்த திருக்கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலாகும். தினசரி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்யும் இக்கோவிலில் பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர் இரவு காவலர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று இரவு வழக்கம்போல அவர்கள் பணியில் இருந்த நிலையில், இன்று காலை பகல் காவலராக வந்த மாடசாமி என்பவர் கோவிலின் கதவைத் திறந்தபோது, இருவரும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சேத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இரு காவலர்களின் உடல்களும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இச்சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளர் பஷீனா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய்கள் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் மூலம் போலீஸார் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோயில் வளாகத்திலேயே நடந்துள்ள இந்த இரட்டைக் கொலை, அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

















