தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, வரும் நவம்பர் 5ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களும், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைமை அமைதியாக இருந்த நிலையில், கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். அதன்பின், கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்தநிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“நம் அரசியல் பயணத்தில் பல சோதனைகள் வந்தாலும், அச்சமின்றி நம் தமிழ்நாட்டு மக்களுக்காக போராடி வருகிறோம். நம்மை எதிரிகளின் சூழ்ச்சிகளாலும் குற்றச்சாட்டுகளாலும் தடுக்க முடியாது. மக்களின் நம்பிக்கைதான் நம்முடைய மிகப்பெரிய வலிமை. அதனை மதித்து, அடுத்த கட்டத்தை நிதானமாகவும் உறுதியுடனும் தொடங்கப் போகிறோம்,” என விஜய் கூறியுள்ளார்.
அதன்படி, தவெகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் இந்த சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















