2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி நிராகரித்துள்ளன.
அதிமுகவின் கூட்டணிக்கான அழைப்பு தொடர்பாக, தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,
“மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு புதிய வரலாறு படைக்கப்போவது உறுதி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்கக் கூட்டத்திலும், அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது.
இதேபோல், பழனிசாமியின் அழைப்புக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இவ்வாறு, முதன்முறையாகவும் பின்னர் மீண்டும் ஒருமுறை கூட கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பழனிசாமியின் முயற்சிகள், முக்கிய எதிர்க்கட்சிகளான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி நிராகரிப்பால் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.