தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்ன ?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை இன்று கட்சித் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். கட்சியின் நிர்வாகிகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, உறுப்பினர் சேர்க்கை பணிகளை சீர்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது

கட்சி தொடங்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணியில் விஜய் முழுமையாக ஈடுபட்டுள்ளார். இதற்கான முதல்கட்டமாக, கடந்த ஆண்டு இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அறிமுகமாகும் புதிய செயலியில், மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளின் வாக்காளர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் வழியாக, வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொரு இல்லத்துக்கும் நேரில் சென்று உறுப்பினர்களை சேர்த்திட ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டுமே செயலியில் அணுகல் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம் மூலம், உறுப்பினர் சேர்க்கை அந்தந்த வீடு அருகிலேயே நிகழ்த்தப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு இடத்திலிருந்து உறுப்பினராக சேர முடியாத வகையில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

வெளியே இருந்து ஆதரவு தருவோர் பற்றிய தகவல்களையும் செயலியில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம், தவெகவுக்கு நேரடி உறுப்பினர் அல்லாத ஆதரவாளர்களின் விவரமும் தொகுக்கப்படவுள்ளது.

2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை விஜய் நிர்ணயித்துள்ளார்.

இந்த புதிய செயலி, கட்சி உறுப்பினர் சேர்க்கையை மாத்திரமல்லாமல், அரசியல் ஆதரவு தரும் மக்களை முறையாக அடையாளம் காணவும் உதவவுள்ளது.

Exit mobile version