டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவு படுத்தி கேள்வி. அரசியல் ஆதாயத்திற்காகவே அண்ணாமலை குரல்கொடுத்தார் என சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன் அறக்கட்டளை தலைவர் குற்றச்சாட்டு.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் பாலஜனாதிபதி இன்று சாமிதோப்பில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும் போது,அய்யா வைகுண்டரை அவமதிக்கும் நோக்கத்தில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் என்ற முடி சூடும் பெருமாள் அய்யா வைகுண்டரின் பெயரை முடிவெட்டும் கடவுள் என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.
தமிழக அரசு பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை இத்தனை கவன குறைவாக பொறுப்பின்றி மொழி பெயர்த்திருப்பது கடுமையாக கண்டனத்திற்குரியது.அய்யா வைகுண்டரை வழிபடுகிற மக்கள் மனதில் இந்த கருத்து ஆழமான வடுவை உருவாக்கி உள்ளது.அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடிய ஒரு மிகப் பொறுப்பில் இருக்கிற நிறுவனத்தில் பொறுப்பற்ற ஒரு ட்ரான்ஸ்லேட் கூட சரியா பண்ண தெரியாத அதிகாரிகள் இருப்பது வேதனைக்குரியது என தெரிவித்தார். தேர்வாணையத்தில் இருப்பவர் வேண்டும் என்றே திட்டமிட்டு அய்யா பெயருக்கு அவமதிப்பை உருவாக்க வேண்டும் என்று செய்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று செய்திருப்பதாகவே நம்புகிறோம்.இதனால் பாதிக்கப்பட்டது அய்யா வழியினர்தான் ஆனால் கொந்தளிப்பவர்கள் ஐயாவை வணங்காதவர்கள் தான்.ஐயாவை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை என்றைக்காவது சாமி தோப்புக்கு வந்து சாமி கும்பிட்டாரா அவர் அரசியல் ஆதாயத்திற்காகவே குரல் கொடுத்தார்.
யார் யாரோ இதையெல்லாம் கண்டிக்கிறதை பார்க்கும் போது ஐயாவை அவமானப்படுத்தியதற்காக கண்டித்தவர்களாக தெரியவில்லை இதை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக தான் கண்டித்தது போல இருக்கிறது.எனவே தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கான அய்யாவழி அன்பர்களுடைய பாதிக்கப்பட்ட மனதை சீர் செய்ய வேண்டும் இதன் மூலம் இந்த அரசு தவறை தண்டிக்கும் அரசு என்றும் இந்த அரசுக்கு எந்தவிதமான கெட்ட நோக்கம் இல்லை என்பதை நிரூபிக்க கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.