ஒரு தரப்பினருக்கு ஆதரவாக உத்தரவு வழங்குமாறு அழுத்தம் திணிக்கப்பட்டதால், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய (NCLAT) நீதிபதி சரத்குமார் சர்மா, வழக்கு விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.
சென்னையில் இயங்கும் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், இரண்டு தரப்பினருக்கிடையிலான நிறுவன வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உயர் நீதித்துறையின் முக்கிய உறுப்பினர் ஒருவர், நீதிபதி சரத்குமார் சர்மாவை அணுகி, ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாம் மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறிய நீதிபதி சரத்குமார் சர்மா, அந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த வழக்கு, தற்போது நீதிபதி ஜதிந்திரநாத் ஸ்வைன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. “எங்கள் நீதிபதிகளில் ஒருவரிடம், ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக உத்தரவு கோரி அணுகப்பட்டிருப்பது எங்களை வேதனைக்குள்ளாக்குகிறது” என்று தீர்ப்பாய அமர்வில் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிபதி விலகியுள்ள நிலையில், இவ்வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்பட உள்ளது.
ஒரு உயர் நீதித்துறை உறுப்பினர் நேரடியாக நீதிபதியை அணுகியிருப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருப்பது, சட்டத்துறையிலும் கார்ப்பரேட் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த நவம்பர் 2024-இலும் நீதிபதி சரத்குமார் சர்மா, வேறு ஒரு வழக்கிலிருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.