மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கிளை நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்டப்பட உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இந்துக்கள் மட்டுமின்றி அதிக அளவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கும் பகுதி என்பதால், நூலக கட்டடம் கட்டும் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜையில் சிவாச்சாரியர், ஜமாத் தலைவர் மற்றும் பாதிரிமார் என மும்மதத்தினர் கலந்து கொண்டு பூஜைகளை செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து,
தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தில் ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளிக்கு ரூ.36.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரிகுமரவேல் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

















