கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ்காலனி தம்பு நகர் பகுதியில், தீராத நோய் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வந்த கமலேஷ் (44), தனது மனைவி இலக்கியா (30) மற்றும் 10 வயது மகள் யக்சிதா ஏஞ்சல் ஆகியோருடன் வசித்து வந்தார். இலக்கியா கடந்த ஒரு வருட காலமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனின்றி தினந்தோறும் கடும் வலியால் துடித்துள்ளார். மனைவியின் வேதனையைக் கண்டு சகிக்க முடியாத கமலேஷ், தனது மகளைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு, தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் “குழந்தையைக் கொன்றுவிட்டு நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” என்று உருக்கமான பதிவை கமலேஷ் அனுப்பியுள்ளார். பதறியடித்து வந்த உறவினர்கள் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மூன்று பேரும் சடலமாகக் கிடந்தனர். உயிரிழந்த சிறுமி யக்சிதா ஏஞ்சல், நாயக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கு முன்பாக கமலேஷ் காரில் சென்றபடி பேசிய உருக்கமான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அதில், தனது மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் இந்த முடிவை எடுப்பதாகவும், தங்களுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல்களை நேரடியாகத் தாங்கள் வழக்கமாகச் செல்லும் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்தை ஏற்கனவே ஆலயத்தில் செலுத்திவிட்டதாகவும், தனது ரூ.10 லட்சம் டெபாசிட் தொகையைச் சபைக்கே எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் மின்வாரியத்தில் பணியாற்றியதால் அரசு மூலம் கிடைக்கப்பெறும் பணப்பலன்களைத் தமிழக ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “தமிழக அரசு எங்கள் வாரிசாக இருந்து எங்களை அடக்கம் செய்ய வேண்டும்; எனது திமுக நண்பர்களும், சிஎஸ்ஐ சபையும் இதற்கு உதவ வேண்டும்” என்று அவர் கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அதேபோல் ஆலயப் போதகருக்கு அனுப்பிய செய்தியில், “நாங்கள் கர்த்தரிடம் செல்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














