தமிழகத்தில் திமுக ஆட்சியின்கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பா. சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உயர்கல்வி நிலை குறித்துத் தவறான தகவல்களைத் தந்து மக்களைத் திசைதிருப்ப முயல்வதாக அவர் சாடினார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும், தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமி அவர்களும் பெண்களுக்கு வழங்கிய பாதுகாப்பினைப் பட்டியலிட்டார்.
குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சியின் போதுதான் பெண் கமாண்டர் படைகள், மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்ததைச் சுட்டிக்காட்டினார். சென்னை, கோவை போன்ற மாநகரங்கள் பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி நடமாடத் தகுதியான இடங்களாகத் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழகம் 52 சதவீதத்தை எட்டிய சாதனையைத் தற்போதைய திமுக அரசு மறைப்பதாகவும், அதேவேளையில் தாலிக்குத் தங்கம் மற்றும் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் போன்ற பயனுள்ள திட்டங்களை முடக்கியதுதான் இந்த அரசின் சாதனை என்றும் அவர் விமர்சித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பன்மடங்கு பெருகியுள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் சரவணன், அண்ணா பல்கலைக்கழகம் முதல் கிருஷ்ணகிரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்படுவது வேதனைக்குரியது என்றார். குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 20,500-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் காவல்துறை மற்றும் ஆசிரியர்களே சில இடங்களில் குற்றவாளிகளாக இருப்பது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குச் சீர்கேட்டைப் பறைசாற்றுவதாகவும் கூறினார். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கிவிட்டு, ஐயாயிரம் ரூபாய் வரை விலைவாசி உயர்வைத் திணித்துள்ள திமுக அரசு, பெண்களுக்கு எதிரான அவதூறு பேசும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் குற்றம் சாட்டிய அவர், 2026-ல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால் மட்டுமே பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
