தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயம் உலகப்புகழ் பெற்ற ஒரு முக்கிய கத்தோலிக்க ஆலயமாகும். இத்தாலியின் வாடிகனில் அமைந்துள்ள புனித பீட்டர் பேராலயத்தால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 10 நாட்கள் மகா திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதற்கமைய, இந்த ஆண்டு நடைபெறும் 443-வது ஆண்டு திருவிழா, இன்று (ஜூலை 26) கொடியேற்ற விழாவுடன் சிறப்பாக தொடங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை பிரம்மாண்டமான கொடி பவனி நடைபெற்றது.
இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்குப் பிறகு, காலை 8.45 மணிக்கு பனிமய மாதாவின் உருவம் பொறித்த கொடி, பங்கு தந்தைகள் ஊர்வலமாக கொண்டு வந்து பேராலய எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆயர் ஸ்டீபன், பங்கு தந்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது பெருந்திரளாகக் கூடியிருந்த பக்தர்கள் “மரியே வாழ்க!” என முழக்கம் எழுப்பி, புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு, கைதட்டியபடி தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். மேலும், துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்ட படகுகளிலிருந்து சைரன்கள் ஒலிக்கப்பட்டது விழாவுக்கு வண்ணம் சேர்த்தது.
இந்த விழாவில் தமிழக அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான கிதாஜிவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக 2 ADSP, 1 ASP, 5 DSP, 15 இன்ஸ்பெக்டர், 35 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 1000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.