பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மத்தியில், இன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்திருந்தார். இதை எதிர்த்து, பொதுச்செயலாளர் முரளி சங்கர் வழியாக ராமதாஸ் தரப்பு, கூட்டத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணையின் போது, இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்மொழிந்தார். அன்புமணி நேரில் ஆஜரான நிலையில், உடல்நலக்குறைவால் ராமதாஸ் காணொலி மூலம் பங்கேற்றார். ஆனால், ராமதாஸ், அன்புமணியுடன் பேச மறுத்ததால், வழக்கு தகுதி அடிப்படையில் விசாரிக்கப்பட்டது.
தீர்ப்பில், இருவரும் தந்தை-மகனாக கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக நீண்டகாலம் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்த நீதிபதி, இது ஒரு உள்கட்சி விவகாரம் என்பதால், இரு தரப்பினரின் அனைத்து வாதங்களையும் பரிசீலிக்க தேவையில்லை என்றார். மேலும், இந்த கூட்டம் உள் அரங்க நிகழ்வாக இருப்பதால், காவல்துறை அனுமதி தேவையில்லை என்றும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க எந்தச் சட்ட ரீதியான காரணமும் இல்லை என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.