மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மலை உச்சியில், தர்கா அருகேயுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு, தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு மற்றும் நீதிமன்றத்திற்கு இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின.
முந்தைய விசாரணையின் போது, “நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 நபர்களை மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும்; இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று ஆஜரான அறநிலையத்துறை மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “நீதிமன்றம் கூறுவது முற்றிலும் புதிய நடைமுறையாக உள்ளது. மத ரீதியான பழக்கவழக்கங்களில் அறங்காவலர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது; அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதால் போதிய கால அவகாசம் தேவை” என வாதிட்டார்.
தொடர்ந்து வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், “புதிதாக ஒரு வழக்கத்தை இபோது தொடங்குவதை ஏற்க முடியாது. மேலும், மனுதாரர்களில் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருப்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் தரப்பிலும் முடிவெடுக்கக் கால அவகாசம் கோரப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். “மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு. இதனை எனது தனிப்பட்ட விருப்பமாகவோ அல்லது உத்தரவாகவோ அரசு நினைக்க வேண்டாம். சட்டத்தின் முன்னிலையில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதுதான் சரியாக இருக்கும்” என அதிரடியாகத் தெரிவித்தார்.
மத நல்லிணக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை முன்வைத்து அரசு தரப்பு அவகாசம் கோரியுள்ள நிலையில், நீதிமன்றம் தனது உத்தரவில் பிடியாக இருப்பதால் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மதுரையில் அதிகரித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது குறித்த பரபரப்பு நிலவுகிறது.
