திருவள்ளூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி திருகோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு

திருவள்ளூர் அருகே தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி திருகோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வில் ஆகம விதிகளுக்கு எதிராக கோவிலுக்கு சம்பந்தமில்லாத நபரை வைத்து கோவில் இணை ஆணையர் முன்னையிலேயே பூஜை செய்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வர சுவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 14-ஆம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி முதல் அம்மன் வீதி உலா, சிறப்பு பூஜைகள் என 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 25-ஆம் தேதி யான நேற்று காலை அன்ன வாகன உற்சவம் திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்போது இந்த கோவிலில் சிவானந்த குருக்கள் என்பவர் கடந்த 29 ஆண்டுகளாக பூஜை செய்து வந்த நிலையில் கோவிலுக்கு சம்பந்தமில்லாமல் உபயதாரர்களை திரட்டி இந்த திருக்கல்யாணத்தை கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் நடத்தினார். கடந்த ஆண்டும் இதே போன்ற நிலைமை ஏற்பட்ட போது கோவில் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து இந்த ஆண்டும் நடைபெறுவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகம விதிகளுக்கு எதிராகவும், இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் இந்த செயல் இருப்பதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் இந்த வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் வேடிக்கை பார்த்ததோடு கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு ஆகம விதிகளுக்கு எதிராக செயல்படும் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version