திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தைக் குறித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை, தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்று ஒத்திவைத்துள்ளது.
அறுபடை வீடுகளில் முதன்மை தலமாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில், பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு மாறாக, மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் முன்பே மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரருக்கு மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக சி.ஐ.எஸ்.எஃப் படையை ஈடுபடுத்தியது தவறல்ல என்றும், வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்து, இதை மறுபடியும் நீதிபதி சுவாமிநாதனே விசாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீதிபதி சுவாமிநாதன் ரத்து செய்து, மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையின் நோக்கம் அதிகாரிகளை தண்டிப்பதல்ல எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் இன்று மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வருகையில், தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது, அந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது எனவே தற்போதைய அவமதிப்பு வழக்கை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றி வைத்தது.
