திருச்செந்தூர் :
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. கோவிலில் எச்.சி.எல். (HCL) நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடியில் 90 சதவீத மெகா திட்ட வளாக பணிகள் நிறைவு பெற்று தக்கார் அருள் முருகன் தலைமையில் மகா கும்பாபிஷேகப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 12 கால யாக பூஜை நடக்கிறது. நேற்று இரவு கோவில் கலையரங்கில் மாதவி வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை தொடங்கியது.
இதில் தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, ஒரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது. மாலையில் 5-ம் கால யாக பூஜை நடக்கிறது அதில் தான்ய வழிபாடு வேள்விச் சாலை தூய்மை ஆகியவை நடக்கிறது.
வருகிற 7-ந் தேதி அதிகாலை 4மணிக்கு 12-ம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகா தீபாராதனை,யாத்ரா தானம், காலை 5.30 மணிக்கு கடம் மூலாலயப் பிரவேசம், 6.15மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், சுவாமி சண்முகர், ஜெயந்தி நாதர், நடராஜர்,குமரவிடங்க பெருமான் மற்றும் உள், வெளி பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பெரு நன்னீராட்டு,காலை 9 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்று சண்முகர் விலாசம் சேருதல் நடக்கிறது.
பின்னர் சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு தங்க திருவாபரணம் அணிவித்து அலங்காரமாகி சண்முகர் தீப வழிபாடு பரிவார மூர்த்திகளுடன் வீதிஉலா வந்து சேர்க்கையில் சேர்தல் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளார்கள் செய்து வருகின்றனர்.