விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு, அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. தேவதானம் ஊரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இந்த அருவி, தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கோடை மற்றும் விடுமுறை கால சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது பிள்ளைகளுடன் இயற்கை சூழலில் நேரத்தை செலவிட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இங்கு திரண்டு வருகின்றனர்.
முழுக்க முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சுற்றுலாத் தளத்திற்குச் செல்ல வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வனத்தின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் நலன் கருதி, வனத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு வாகனங்கள் மூலம் மட்டுமே பயணிகள் அருவிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு நபர் ஒருவருக்கு நுழைவுக் கட்டணமாக 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனவிலங்குகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வனத்துறை வாகனங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப்படுகின்றனர்.
இந்தச் சுற்றுலாப் பயணத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக, அருவிக்குச் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள ஆன்மீக மற்றும் இயற்கை தளங்கள் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. குறிப்பாக, ‘ஆகாய ஸ்தலம்’ என்று போற்றப்படும் பழமையான நச்சாடை தவிர்த்தருளிய நாதர் திருக்கோவில் மற்றும் 33 அடி உயரம் கொண்ட சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் ஆகிய இடங்களைச் சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். சமீபத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சாஸ்தா கோவில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அதில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நீராடி, ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். விடுமுறை தினமான இன்று, சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் தேவதானம் மலைப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.

















