கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகள், தந்தையை இழந்த துயரத்திலும், அவரை அடக்கம் செய்யத் தேவையான பணம் கூட இல்லாமல் தவித்த நிலையில், அவர்களுக்கு அரசு முழு ஆதரவாக இருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
வசந்தி – கமலக்கண்ணன் தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் உள்ளனர். ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வசந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்தார். அந்த நிலையிலும், கமலக்கண்ணன் கூலித்தொழிலில் ஈடுபட்டு பிள்ளைகளை வளர்த்து வந்தார். ஆனால் சமீபத்தில் உடல்நிலை மேலும் மோசமடைந்து, கடந்த 14ஆம் தேதி அவர் திடீரென மரணமடைந்தார்.
பணமின்றி தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் துயரத்தில் நின்ற பிள்ளைகளின் நிலையை கண்ட கிராமத்தினர், அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி இறுதிச் சடங்கை நடத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தி அறிந்த முதல்வர், மூன்று மகள்களும் வறுமை காரணமாக படிப்பை நிறுத்தியிருப்பதைக் கவனித்து, தாம் நேரடியாக பேசிப் பிள்ளைகளின் தேவைகள் அனைத்துக்கும் அரசு துணையாக இருக்கும் என நம்பிக்கை அளித்தார். இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பொறுப்பு அமைச்சர் எ.வ. வேலு பூட்டை கிராமத்துக்கு சென்று பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி, அவசர நிதி உதவியாக ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில்,
“இந்த நான்கு குழந்தைகளும் இப்போது நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு கவனிக்கும்”
என்று தெரிவித்துள்ளார். மேலும், காலை செய்தி அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியரிடம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
