“முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியையும் ஏற்காது” என்று பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூடுபிடித்த நிலையில், பல்வேறு கட்சிகள் தங்களின் திட்டங்களை அறிவித்து வருகின்றன. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகியவை தேர்தல் களத்தில் மோதவுள்ளன. இதனால் நான்கு முனை போட்டி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தினகரன், செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது :
“இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி முத்திரை பதிக்கும். எங்கள் கட்சி இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் எங்களுக்கு உறுதி உள்ளது. மே மாதத்தில் இதற்கான விளைவை நீங்கள் தெளிவாகப் பார்ப்பீர்கள்.
ஆனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பவரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியையும் ஏற்காது. எங்களுடன் இணையும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணியாக அமையும்.”
செங்கோட்டையன் விதித்த 10 நாள் காலக்கெடு குறித்து கேட்கப்பட்டபோது, “அது செங்கோட்டையன் விவகாரம், அதற்கு அவர் தான் பதில் அளிப்பார்” என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தைப் பற்றிய கேள்விக்கு, “டெல்லி செல்லுவது அவருடைய தனிப்பட்ட விஷயம்” என்று தினகரன் குறிப்பிட்டார்.
















