ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கிச் சீரழியும் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் நிழற்குடை இன்றி தவிக்கும் பயணிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள பேருந்து நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், தனியார் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும் முடங்கிக் கிடப்பதால், அதனைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மாவட்டத்தின் முக்கியப் போக்குவரத்து இணைப்பு மையமாகத் திகழும் இப்பேருந்து நிலையம், தற்போது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருவது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரமங்கலம் பேருந்து நிலையமானது உசிலம்பட்டி, மதுரை மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களை இணைக்கும் மிக முக்கியமான சந்திப்பாக உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்குப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏதுமே இல்லை. வெயிலிலும் மழையிலும் ஒதுங்குவதற்கு முறையான நிழற்குடை இல்லை, அமர்ந்து செல்வதற்கு இருக்கை வசதிகளும் இல்லை. இதனால் முதியவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்பவர் வேதனையுடன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இப்பேருந்து நிலையம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. சுற்றிலும் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பால் பேருந்து நிலையத்தின் பரப்பளவு சுருங்கிவிட்டது. ஒரு பேருந்து வந்து நின்றால் கூடப் பயணிகள் நிற்க இடமில்லாத அவல நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடை வாசல்களிலும், அழுக்கடைந்த தரையிலும் அமர வேண்டிய சூழல் நிலவுகிறது. இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

மேலும், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் கடைகள் தங்கள் எல்லைகளைத் தாண்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பேருந்துகள் வந்து செல்வதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தின் ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றி, நவீன நிழற்குடை, இருக்கை வசதி மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version