சென்னை:
கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற விஜயின் பிரச்சார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பின், ஒரு மாதம் கழித்து, உயிரிழந்தோரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார்.
இந்த துயரத்துக்குப் பிறகு, தவெக நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு மந்தமாக இருந்த நிலையில், சமீபத்தில் 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை விஜய் அறிவித்துள்ளார். புதிய குழுவில் பொதுச் செயலாளராக ஆனந்த், பிரச்சாரப் பொறுப்பாளராக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆறுதல் நிகழ்ச்சியின் போது, பவுன்சர் அனுமதி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பொருளாளர் வெங்கட்ராமனின் பெயர், புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆனந்தின் வழிகாட்டுதலின்படி கட்சியின் பணிகள் நடைபெற்றதாக கூறி வந்த விஜய், இப்போது தனது நேரடி வழிகாட்டுதலின் கீழ் புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், அமைப்பு வலுவூட்டல் மற்றும் வரும் தேர்தல்களை முன்னிட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















