பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக அமைக்கப்பட்ட பந்தலை பழுதடைந்த வாகனத்தில் கயிறு கட்டி நிறுத்திய அவலம். ஊழியர்கள் செல்போன் நோண்டிக் கொண்டும், தூங்கிக் கொண்டும் இருந்ததோடு முறையான அறிவிப்பு பலகை இல்லாததால் முண்டியடித்த பொது மக்கள்
விடியா முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இந்தமுகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர். அதன்படி திருவள்ளூர மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெய்வேலி, மோவூர், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, பூண்டி ஆகிய ஆறு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்காக அமைக்கப்பட்ட பந்தலை பழுதடைந்த வாகனத்தில் கயிறு கட்டி நிறுத்திய அலவலமும் அரங்கேறியது. அதோடு பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வோ, முறையான அறிவிப்போ இல்லாததாலும், எந்தெந்த துறை சார்பாக மனுக்கள் பெறப்படுகிறது என்ற அறிவிப்பு பலகையும் வைக்காததால் கூட்டம் முண்டியடித்த படி நின்றுகொண்டு இருந்தனர். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் செல்போனில் பேசிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும், ஒரு சிலர் தூங்கிக் கொண்டும் இருந்தது. பொது மக்களிடையே எரிச்சலைக் கிளப்பியது. அரசு சார்பில் திட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் முகாமை நடத்தும் நிலையில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் முகாமை நடத்துவது கண் துடைப்பு நாடகமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
