மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் தொகுதி, அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “திண்ணைப் பிரச்சார” நிகழ்வில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு தமிழக அரசின் மீதான புகார்களைப் பட்டியலிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மனுமான தமிழழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் பொதுமக்களிடம் ஆர்.பி. உதயகுமார் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்த இந்த எழுச்சி மிகு பிரச்சாரத்தில், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணிவகுத்தனர்.
பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.பி. உதயகுமார், திமுக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார். “கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ரூ.2,500 ரொக்கப்பரிசு வழங்கினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், இந்தத் தொகை போதாது, ரூ.5,000 வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டார். ஆனால், இன்று அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான் சொன்ன வாக்குறுதியை மறந்து மௌனம் காக்கிறார். மக்கள் இப்போது ஏமாற்றப்பட்ட உணர்வில் உள்ளனர். ஆனால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 2027-ஆம் ஆண்டு தைத்திருநாளில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, மக்கள் எதிர்பார்த்தபடி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.5,000 பொங்கல் பரிசு வழங்குவார் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும், திமுக அரசின் மீது நிதி மேலாண்மை குறித்தக் கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடி திமுக அரசு முறைகேடான முதலீடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, இன்றைய தினம் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சரின் கார் டயர் வெடித்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “மக்களை ஏமாற்றலாம், ஆனால் முருகப் பெருமானை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. நீங்கள் எத்தனை முறை டயர்களை மாற்றினாலும், மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும். இன்று டயர் வெடித்திருப்பது, மக்களின் கோபம் விரைவில் வெடிக்கும் என்பதற்கான முருகப் பெருமானின் எச்சரிக்கை மணி” என்று ஆன்மீக ரீதியிலான விமர்சனத்தையும் முன்வைத்தார்.
இந்தத் திண்ணைப் பிரச்சாரத்தில் அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, பேரூர் கழகச் செயலாளர்கள் அழகுராஜா, குமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் லட்சுமி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அலங்காநல்லூரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற இந்தப் பிரச்சாரம், அப்பகுதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், வரும் தேர்தலுக்கான அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது.

















