திருச்சி : “சமூக நீதி போராட்டத்தின் பலனாகவே இன்று நாம் காணும் தமிழகம் உருவாகியுள்ளது. மாணவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முக்கிய உரையாற்றினார்.
“நான் அரசியல் பேச இங்கு வரவில்லை. ஆனால், மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம். கேட்சே வழியில் செல்லக்கூடாது. கல்வி மிக முக்கியமானது. அதுவே உங்கள் நிலையான சொத்து,” என அவர் வலியுறுத்தினார்.
“இந்த லிஸ்டில் நீங்களும் வரணும்”
இக்கல்லூரியில் கல்வி பெற்றவர்கள் இன்று பலரும் உயர்ந்த நிலைகளில் இருப்பதைத் தொடர்ந்து, முதலமைச்சர் கூறியதாவது :
“இந்தக் கல்லூரியில் படித்த கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று எங்கள் அமைச்சரவையில் சீனியர்களாக உள்ளனர். நாளை உங்களிலும் சிலர் இந்த பட்டியலில் சேரலாம். சேரவேண்டும்! தமிழக வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.”
“நட்பு ஓல்ட் ஏஜ் வரை தொடரட்டும்” மாணவர்களிடையே உருவாகும் நட்பு சமூகத்தில் தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும் என்றும், அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்றும் கூறிய ஸ்டாலின்,
“பல வேலைகளில் இருந்தாலும் மாணவர்களை சந்திக்கும்போது எனர்ஜி வந்துவிடுகிறது,” என்றார். 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பு இளைய தலைமுறையை அறிவு சார்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், தமிழக அரசு மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கையையும் முதலமைச்சர் பகிர்ந்தார் :
“கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்புகள் வழங்கப்படவுள்ளன. இளைஞர்களுக்கு எப்போதும் திமுக அரசு துணையாக இருக்கும்,” என உறுதியளித்தார்.