கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவில் இருந்த இந்திய பங்குச் சந்தை, இன்று உலகளாவிய நல்ல செய்திகளின் பின்னணியில் சக்திவாய்ந்த ஏற்றத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்க வட்டி விகிதம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு, ரஷ்யா–உக்ரைன் போர் முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வரவு ஆகியவை சந்தையை உயர்த்த முக்கிய காரணிகளாக அமைந்தன. இதனால் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்றைய சந்தை நிலை
நவம்பர் 26 அன்று சென்செக்ஸ் 800 புள்ளிகளை மீறி உயர்ந்து, இன்ட்ராடே உச்சமாக 85,403.27 புள்ளிகளைத் தொட்டது.
நிஃப்டி 50 குறியீடு 1% உயர்வுடன் 26,139.30 என்ற அதிகபட்சத்தை எட்டியது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1% மேல் உயர்ந்து சந்தையின் மொத்த ஏற்றத்துக்கு துணைபோட்டன.
பிஎஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு முந்தைய அமர்வின் ₹469 லட்சம் கோடி இலிருந்து ₹474 லட்சம் கோடி வரை உயர்ந்ததால், முதலீட்டாளர்களின் செல்வம் மட்டும் இன்று சுமார் ₹5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஏன் உயர்கிறது?
- ஷார்ட் கவரிங்
சமீபத்திய சரிவுக்குப் பின்னர், சந்தையில் ஷார்ட் கவரிங் அதிகரித்துள்ளது. எதிர்காலத்திற்கு சாதகமான பொருளாதார சுட்டுக்காட்டுகள் இருப்பதால் முதலீட்டாளர்கள் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
- பாசிட்டிவான உலகச் சூழல்
உலகளவில் ஆபத்து உணர்வு குறைந்து, முதலீட்டு உணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுடன் தொடர்புடைய நம்பிக்கை.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் டிசம்பரில் வட்டி விகிதம் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சுங்க வரிகளில் மென்மையான அணுகுமுறை
இவை அனைத்தும் உலக சந்தைகளின் ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளன. ஜப்பான் நிக்கேய், கொரியாவின் கோஸ்பி போன்ற ஆசிய சந்தைகளும் இன்று 2% வரை உயர்வை பதிவு செய்துள்ளன.
- ரஷ்யா–உக்ரைன் போரின் முடிவு குறித்த நம்பிக்கை
2022ஆம் ஆண்டு தொடங்கிய போரின் முடிவு உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்யும். இதனால் கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், உலோகங்கள் போன்ற முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது. இதுவே உலக பணவீக்கத்தைக் குறைக்கும் நல்ல செய்தியாக சந்தைகளால் பார்க்கப்படுகிறது.
- FII வரவு
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நவம்பர் 25ஆம் தேதி மட்டும் ரொக்கப் பிரிவில் ₹785 கோடி மதிப்பில் பங்குகள் வாங்கியுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை குறைவு, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு, 10 ஆண்டு பத்திர வருவாய் வீழ்ச்சி ஆகியவை இந்திய சந்தை மீது FIIs ஆர்வம் அதிகரிக்க காரணமாக உள்ளன.
















