மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை காரணமாக, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் காணப்படும் அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் சொந்த நாட்டு காலநிலையை இங்கும் உணரும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து விதவிதமான தாவரங்களை ஊட்டிக்குக் கொண்டு வந்து பயிரிட்டனர். அந்த வகையில், வெளிநாட்டுத் தாவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், நீலகிரி மாவட்டத்தின் புவியியல் அமைப்புக்கே உரிய பிரத்யேக மரங்களும், தாவரங்களும் இங்குள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் அடர்ந்த மலைப் பிரதேசங்களில் பரவலாக வளர்ந்துள்ளன. இத்தகைய சூழலில், நீலகிரியின் உயரமான மலைப் பகுதிகளில் தற்போது பூத்துக் குலுங்கும் ரோடோரென்ட் மலர்கள் காண்போர் கண்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளன.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதிகளான அப்பர் பவானி, தொட்டபெட்டா, கோரகுந்தா மற்றும் அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் இந்த ரோடோரென்ட் மரங்கள் செறிந்து காணப்படுகின்றன. ஆண்டுதோறும் குளிர்காலத்தின் இறுதியிலும் வசந்த காலத்தின் தொடக்கத்திலும், அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். தற்போது பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் இந்த மலர்களின் வரத்து அதிகரித்து, காடு முழுவதும் இளஞ்சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பார்ப்பதற்கு அப்படியே ரோஜா மலர்களைப் போன்றே தோற்றமளிக்கும் இந்த ரோடோரென்ட் மலர்கள், அடர் பச்சை நிறக் காடுகளுக்கு இடையே இயற்கையாகச் சூட்டிய திலகம் போலக் காட்சியளிக்கின்றன.
நீலகிரியின் இயற்கை அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள், அவலாஞ்சி மற்றும் கோரகுந்தா பகுதிகளில் உள்ள இந்த மலர் அழகில் மெய்மறந்து போகின்றனர். இப்பகுதிகளுக்குச் செல்லும் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கார் மற்றும் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, மரங்களைச் சூழ்ந்துள்ள இந்த சிவப்பு வண்ண மலர்களைக் கண்டு ரசிப்பதுடன், தங்களது கைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். காடுகளின் பசுமைக்கு நடுவே சிவப்புக் கம்பளம் விரித்தாற்போலத் தோற்றமளிக்கும் இந்த ரோடோரென்ட் மலர்களின் பூரிப்பு, இந்த சீசனில் நீலகிரிக்கு வரும் பயணிகளுக்குக் கூடுதல் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
