தென்னகத்தின் காசி என்று போற்றப்படும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோவிலில், சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட வெள்ளித்தேரின் வெள்ளோட்டம் இன்று பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்திருத்தலத்தில், கடந்த 1990-ஆம் ஆண்டு வரை வைகாசி விசேஷ நாட்களில் வெள்ளித்தேர் உலா நடைபெறுவது வழக்கம். ஆனால், 1991-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்தத் தேர் முழுமையாகச் சேதமடைந்தது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த பக்தர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் 2023-24 மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ. 3.32 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய வெள்ளித்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேருக்காக உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் மனமுவந்து வழங்கிய 429 கிலோ 717 கிராம் எடையுள்ள வெள்ளி உருக்கப்பட்டு, அதில் நுண்ணிய நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மரத்தேரில் இந்த வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டு, கண்ணைப் பறிக்கும் கலைநயத்துடன் இத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பான நிகழ்வில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. மனோஜ் பாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர் கிரகாம்பெல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர் அசைந்து வந்த காட்சியைக் கண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் “நெல்லையப்பா… காந்திமதித் தாயே…” என முழக்கமிட்டு நெகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.
வெள்ளித்தேர் வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, திருக்கோவிலில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருப்பணிகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். குறிப்பாக, ரூ. 99 லட்சம் மதிப்பிலான அம்மன் சன்னதி இரண்டாம் பிரகார கல்மண்டபப் புதுப்பிப்புப் பணி, ரூ. 143 லட்சம் மதிப்பிலான மேற்கூரை தட்டோடு பதிக்கும் பணி மற்றும் ரூ. 160.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கருஉருமாறி தீர்த்தக்குளம் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. மேலும், திருக்கோவிலின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ரூ. 1.84 கோடி மதிப்பீட்டில் நவீன மின் இணைப்புகள் அமைக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், கிறித்துவ தேவாலய உபதேசியார்கள் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 34 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு வெள்ளித்தேர் வீதியுலா வந்திருப்பது நெல்லை மாநகர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















