திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த இயற்கை எழில் சூழ்ந்த பச்சமலையில், வெளியுலகிற்குத் தெரியாத ஒரு ரகசிய பொக்கிஷமாக ‘மாவிடை’ நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுமார் 32 மலைக்கிராமங்களைக் கொண்ட பச்சமலையின் கோம்பை ஊராட்சியில் உள்ள மருதை கிராமத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. செம்புளிச்சாம்பட்டி மற்றும் மருதை ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் பயணித்தால், காண்போரைக் வியக்க வைக்கும் வகையில் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த நீர்வீழ்ச்சி, ராமநாதபுரம் என்ற கிராமத்தில் இருந்து உருவாகும் மாவிடை ஆற்றின் மூலம் உருவெடுத்து, பச்சமலையின் செழுமையை பறைசாற்றுகிறது.
மாவிடை நீர்வீழ்ச்சியின் அமைப்பு தனித்துவமானது. இதன் முதல் அடுக்கில் ராட்சத பாறைகளுக்கு இடையே உருண்டு விழும் தண்ணீராகத் தொடங்கி, இரண்டாவது அடுக்கில் குளம் போன்ற தேக்க நிலையை அடைகிறது. இங்கு நீச்சல் அடித்துக் குளிக்க வசதி இருந்தாலும், நீர்நிலை ஆழமாக இருப்பதால் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் இது கருதப்படுகிறது. இதன் மூன்றாவது அடுக்கு காண்போரைக் கதிகலங்க வைக்கும் வகையில் சுமார் 200 அடி ஆழமுடைய ராட்சத பாறைகளில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் பிரம்மாண்ட அருவியாக உருமாறுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் நீர் பச்சமலை அடிவாரத்தில் உள்ள கீரம்பூர் ஏரிக்குச் சென்று அடைகிறது. குறிப்பாக, மலைகளில் விளையக்கூடிய அரிய வகை மூலிகைகளில் பட்டு வருவதால், இந்த அருவி நீர் மிகுந்த புத்துணர்ச்சியையும், சுவையையும் கொண்டதாக உள்ளது.
இதுகுறித்து செம்புளிச்சாம்பட்டி மற்றும் மருதை பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில், “ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த மாவிடை அருவி, மற்ற ஆறு மாதங்களில் சிறிய நீர்வீழ்ச்சியாகக் காட்சியளிக்கும். தற்போது இந்த அருவிக்குச் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடாக இருப்பதால், விடுமுறைக்கு வரும் உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே இங்குச் சென்று வருகின்றனர். தமிழக சுற்றுலாத் துறை அதிகாரிகள் இங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரியப் படிக்கட்டுகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தர வேண்டும். அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றினால், பச்சமலை மேலும் பிரபலமடையும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
தற்போது திருச்சியில் இருந்து எளிதில் அணுகக்கூடிய சுற்றுலாத் தலமாகப் பச்சமலை வளர்ந்து வரும் வேளையில், இந்த மறைந்து கிடக்கும் மாவிடை நீர்வீழ்ச்சியை மீட்டெடுப்பது அவசியமாகிறது. மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால், சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து, இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு மேம்படும். யாரும் அறியாத இந்த மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சி, முறையான பராமரிப்புடன் திறக்கப்பட்டால், திருச்சி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா அடையாளமாக மாறும் என்பதில் ஐயமில்லை.













