பழனி மலைத் தொடர்ச்சியில் விளைவிக்கப்படும் அரபிக்கா வகை காப்பி பயிர்களுக்கு வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது.
சமீபத்தில் கிலோ ஒன்றிற்கு ₹600 வரை விற்பனையாகி வருவதால், கொடைக்கானல் மற்றும் அதனைச் சூழ்ந்த மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் உள்ள பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, மங்களம் கொம்பு, பாச்சலூர், பன்றி மலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் காப்பி முக்கியமாக விளைவிக்கப்படுகிறது. இந்த மலைப்பகுதிகள் அனைத்தும் பழனி மலைத் தொடர்களின் நீட்சியாக அமைந்துள்ளன.
இங்கு சுமார் 28,000 ஹெக்டேர் பரப்பளவில் அரபிக்கா வகை காப்பி பயிரிடப்படுகிறது. அதன் முக்கிய மையமாக தாண்டிக்குடி மண்டல காப்பி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
தாண்டிக்குடி மண்டல காப்பி ஆராய்ச்சி நிலையம்,
விவசாயிகளுக்கு காப்பி செடிகள் நட்டு பராமரிக்கும் முறை, நிழல் மரங்கள் வளர்ப்பு, பூச்சி கட்டுப்பாடு, அறுவடை மற்றும் உலர்த்தல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் துணை இயக்குநர் ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் மற்றும் பழனி மலைத் தொடரில் விளைவிக்கப்படும் அரபிக்கா வகை காப்பி தனித்துவமான மணமும் சுவையும் கொண்டது.
இங்கு இயற்கை வளமும், மண் தரமும் சிறப்பாக இருப்பதால் காப்பியின் தரம் உயரும். பிரதமர் நரேந்திர மோடியும் மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் காப்பி பயிரிடும் சிறப்பை குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார்.” முன்னதாக கிலோ ஒன்றிற்கு ₹350 வரை மட்டுமே விலை நிலவிய நிலையில், சமீபத்தில் வெளிநாட்டு சந்தைகளில் தேவை அதிகரித்ததோடு, பிரேசில் மற்றும் வியட்நாம் நாடுகளில் புயல் மற்றும் வெள்ளத்தால் காப்பி உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் அரபிக்கா வகை காப்பிக்கு விலை திடீரென ₹550 முதல் ₹620 வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த விலையாகும். தரமான காப்பி விளைவிக்கப் படும் இந்த மலைப்பகுதிகளில் இருந்து, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மண்டல காப்பி ஆராய்ச்சி நிலையம் தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் இருந்து சுமார் 7000 மெட்ரிக் டன் காப்பி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது மாநில அளவில் காப்பி ஏற்றுமதியில் சுமார் 30 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. தாண்டிக்குடி பகுதியில் காப்பி விவசாயியாக உள்ள சண்முகம் கூறியதாவது: “இந்த வருடம் மழை அளவு சரியாக இருந்தது. காப்பி செடிகள் நன்றாக மலர்ந்துள்ளன. விலை உயர்ந்திருப்பதால் எங்கள் உழைப்புக்கான நியாயமான பலன் கிடைத்திருக்கிறது.
அரசு சிறிய அளவு விவசாயிகளுக்கும் சேமிப்பு மற்றும் உலர்த்தல் மையங்களை அமைத்து கொடுத்தால் மேலும் நல்ல பலன் கிடைக்கும்.” மற்றொரு விவசாயி மணிகண்டன் கூறினார்: “வெளிநாட்டில் தமிழ்நாட்டு காப்பிக்கு பெருமை கிடைத்திருப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது. அடுத்த சீசனிலும் விலை உயர்ந்தே இருக்கும் என நம்புகிறோம்.” காப்பி ஆராய்ச்சி நிலையம் தற்போது “தரமான விதை செடி பரவல் திட்டம்” மூலம் தரமான காப்பி வகைகளை சிறு விவசாயிகளிடையே பரவச் செய்து வருகிறது.
மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நீர் சேமிப்பு குளங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு “மலைப்பகுதி சிறப்பு நிதி திட்டம்” மூலமாக காப்பி உற்பத்தி மற்றும் காப்பி சாகுபடி செய்யும் உபகரணங்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. சர்வதேச சந்தையில் காப்பி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அளவு 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், கொடைக்கானல் மற்றும் பழனி மலைகளில் உள்ள விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

















