திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு நூல்களை பெற்றுக்கொண்டார்.

திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியில் ஆய்வாளரும் எழுத்தாளருமான எடையூர்.மணிமாறன் எழுதிய தஞ்சை சமவெளி நாகரிகம் – வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ், அரசியல், ஆன்மீகம் மற்றும் பிற துறைகள் என ஐந்து பகுதியாக நூல்கள் வெளியிடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் புலவர்கள், அரசியல் பேராளுமைகள், திரையுலக சக்கரவர்த்திகள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிறந்த இடங்கள், புகைப்படங்கள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களான கவிஞர் சினேகன், ஊடகவியலாளர் விஜயன், திருவாரூர் தமிழ் சங்க தலைவர் புலவர் சண்முகவடிவேல் உள்ளிட்ட பலர் 1799ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் சங்க காலம் முதல் சம காலம் வரையிலான பேராளுமைகளின் புகைப்பட தொகுப்பை பார்வையிட்டனர்.

தொடர்ந்து தஞ்சை சமவெளி நாகரிகம் வரலாற்று ஆவண கருவூலம் நூலை திருவாரூர் தமிழ் சங்க தலைவர் புலவர் சண்முகவடிவேல் வெளியிட மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், இயற்கை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version