குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டுள்ள பொதுக் கழிப்பிடப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து அப்பகுதி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிக்காகப் பொதுமக்கள் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் பின்புறம், தென்கரை பாசன வாய்க்கால் கரை ஓரத்தில் அமைந்துள்ள நகராட்சியின் 7-வது வார்டு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, நகராட்சி நிர்வாகம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு புதிய பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் திரண்ட பொதுமக்கள், குளித்தலை காந்தி சிலையிலிருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாத நகராட்சி நிர்வாகம் யாருக்காகச் செயல்படுகிறது?” எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

தகவலறிந்து வந்த மண்டல துணை வட்டாட்சியர் நீதிராஜன், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் தீப திலகை, வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் அழகர் மற்றும் குளித்தலை காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். “இன்னும் ஒரு வார காலத்திற்குள் கழிப்பிடப் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, “ஒரு வாரத்திற்குள் பணிகள் தொடங்கப்படாவிட்டால், வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் தாலுகா அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனப் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

Exit mobile version