நாகப்பட்டினம் சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலை 45 A வில் 194 கிலோமீட்டர் தூரத்திற்கு விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் இடையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை மாவட்டம் வழியே நாகப்பட்டினம் இடையே சுமார் 6431 கோடி திட்ட மதிப்பீட்டில் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் எட்டு உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பாலங்களில் உள்ளே நிரப்புவதற்கு தரமான உறுதியான சவுடு கலந்த மணல் பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனம் பாலங்களில், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல் கொண்டு வந்து கொட்டப்பட்டு, அதனுடன் சவுண்டு மணல் கலந்து பாலம் நிரப்பப்படுகிறது. அடர்த்தி குறைவான சாம்பல் கலக்கப்படுவதால் மண்ணின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக இருப்பதுடன், மழைக்காலங்களில் சாம்பல் கரைந்து பாலங்களில் பழுது ஏற்படுவதற்கும் அதன் மூலமாக பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தரமான வகையில் பாலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
