தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டுக்குரியது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்:-
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த திருத்தணி சுவாமிநாதனும் ஒருவர். திருத்தணி சுவாமிநாதன் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் தேவார பாடசாலையில் தேவாரம் பயின்றவர். தற்பொழுது அதே பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தர்மபுரம் ஆதீனத்தின் சார்பில் திருமுறை கலாநிதி என்ற பட்டம் பெற்றவர் ஆவார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருப்பது குறித்து தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தருமையாதீன தேவார பாடசாலை தலைமை ஆசிரியர் திருமுறை கலாநிதி ஓதுவார் சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு அளித்திருப்பது பாராட்டுக்குரியது. முதன் முறையாக திருமுறைக்கு பெருமை சேர்க்கு முகமாக அறிவித்த மத்திய அரசுக்கும் பன்னெடுங்காலம் திருமுறையிலேயே தன் வாழ்நாளை கழித்து வரும் நம் பாடசாலை மாணவரும் நம் பாடசாலை தலைமை ஆசிரியருமான சுவாமிநாதன் ஓதுவார் தொண்டு உலகெங்கும் பரவ செந்தமிழ் சொக்கநாதன் திருவருளையும் தாருமையாதீன குரு மணிகள் குருவருளையும் சிந்திக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்













