திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் பண்டிகை “சமத்துவப் பொங்கல்” விழாவாகப் பள்ளி வளாகத்தில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் அருள்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, நிர்வாக இயக்குநர் ஜெயந்த் அருள்மாணிக்கம் முன்னிலை வகித்தார். பள்ளி குழுமத்தின் செயலாளர் சுமதி அருள்மாணிக்கம் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழாவை, பள்ளி முதல்வர் யாமலதா குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். மாணவர் ரஞ்சனி வரவேற்புரை ஆற்ற, பள்ளி வளாகம் முழுவதும் தோரணங்களாலும் கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒரு கிராமத்துத் திருவிழாவைப் போன்றே காட்சியளித்தது. பொங்கல் பானைகளில் புத்தரிசியிட்டு “பொங்கலோ பொங்கல்” என மாணவர்கள் முழக்கமிட, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு செய்யப்பட்டது.
மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக கிராமிய நடனங்கள், சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது விழாவின் கூடுதல் சிறப்பம்சமாக அமைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மேலும், ஆசிரியர்களுக்கிடையே அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் விதமாக ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக மகேஸ்வரி நன்றியுரை கூற, வந்திருந்த அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இக்கொண்டாட்டம் இளைய தலைமுறையினருக்குத் தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
















