தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் திருவிழா நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களிடையே ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வளர்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு, துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முகமது ரபீக் மற்றும் பொருளாளர் நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவினை ஒருங்கிணைத்தனர். நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியில் புதிய பானையிட்டு, வழக்கறிஞர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட, இனிப்புப் பொங்கல் தயார் செய்யப்பட்டது. பின்னர் அந்தப் பொங்கல் சூரிய பகவானுக்கும், அருகில் உள்ள விநாயகர் கோவிலிலும் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் அடையாளமாக, ஜல்லிக்கட்டுக் காளைக்கு பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாகப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, கயிறு இழுத்தல், பானை உடைத்தல் மற்றும் இசை நாற்காலி போட்டிகளில் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், சிறுவர் சிறுமியர்களுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. விழாவின் சிறப்பம்சமாக, துறையூர் விமலா பள்ளியில் சிலம்பு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளின் சிலம்பாட்டக் கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்க நிர்வாகிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்கள் எஸ்.ஆர். செந்தில், சிவகுமார், நிர்மல், முத்துகுமார், சுரேஷ்குமார், ரத்தினம், அன்பு பிரபாகரன், கோகிலா, ரம்யா, பாகீரதி, தனலட்சுமி உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா சூழலை உருவாக்கும் விதமாக நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தற்காலிகமாகப் பெட்டிக் கடை, தேநீர் கடை, பாப்கார்ன் மற்றும் பஞ்சுமிட்டாய் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. வழக்கமான நீதிமன்றப் பணிகளுக்கு இடையே, கிராமிய மணத்துடன் நடைபெற்ற இந்த பொங்கல் விழா, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களிடையே பெரும் குதுகலத்தை ஏற்படுத்தியதுடன், நீதிமன்ற வளாகத்தையே ஒரு கிராமத்துப் பண்டிகைக் களம் போல மாற்றியிருந்தது. சட்டப் பணிகளைக் கையாளும் வழக்கறிஞர்கள், தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தமிழர்களின் பண்பாட்டு விழாவைக் கொண்டாடியது சமூக நல்லிணக்கத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது.














