2 கிமீ தூரம் சென்று மாணவர்கள் தண்ணீர் எடுத்துவரும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் மதிய உணவுக்காகத் தேவையான தண்ணீர் இல்லாததால், தலைமை ஆசிரியர் மாணவர்களை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அதன் பேரில் சில மாணவர்கள் சைக்கிளில் சென்று, இரண்டு குடங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அதில், தண்ணீர் கொண்டு வந்த மாணவர்களில் ஒருவர் சைக்கிளிலிருந்து தவறி விழும் காட்சியும் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களிடம், இவ்வாறு சுமை சுமக்கச் சொல்லும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும், “தண்ணீர் எடுக்கச் செல்லும் மாணவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்குப் பொறுப்பு யார்?” என்ற கேள்வியும் சமூகத்தில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா அவர்களைத் தொடர்பு கொண்ட போது, “பள்ளியின் மோட்டார் இயங்காத காரணத்தால், குடிநீருக்காக மாணவர்கள் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர் என தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான அறிக்கையை வழங்கத் தலைமை ஆசிரியருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

Exit mobile version