உலக கால்பந்தின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, வரவிருக்கும் 2026 உலகக் கோப்பை தான் தனது கடைசி எனத் தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ தற்போது 40 வயதில் இருந்தும் தனது அதிரடியை இன்றும் தொடர்கிறார். சர்வதேச அரங்கில் 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களைப் பதிவு செய்து, அதிக கோல் அடித்த வீரராக சாதனைப் படைத்துள்ளார். மொத்தம் 950க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸ்ர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் களமிறங்கி வருகிறார். உலகின் முதல் பில்லியன் டாலர் சொத்து மதிப்பை பெற்ற கால்பந்து வீரர் என்ற பெருமையும் அவருக்கே சொந்தம். தற்போது அவரது சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக (சுமார் ₹11,000 கோடி) உயர்ந்துள்ளது.
தனது ஓய்வு குறித்து ரொனால்டோ கூறியதாவது :
“கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக நான் எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். இனி மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன் என நினைக்கிறேன். 2026 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன்,” என்றார்.
வரவிருக்கும் 2026 உலகக் கோப்பை, ரொனால்டோவுக்கு ஆறாவது உலகக் கோப்பை ஆட்டமாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















