விஜய் பின் வரும் கூட்டம் கொள்கை அற்ற கூட்டம், மக்கள் இவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், சனிக்கிழமை நாடகத்தை விஜய் நடத்தி வருகிறார்- விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி விழுப்புரத்தில் பேட்டி
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி இன்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் கூறிய வாக்குறுதிகளோடு கூறாதவற்றையும் நிறைவேற்றி வருகிறார். ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்காக பேசி வருகிறார்; அவரை அவரே தலைவராக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை தலைவராக ஏற்க மாட்டார்கள். விஜய் நடத்தும் கூட்டங்கள் வெற்றி பெறுவதற்காக அல்ல, கொள்கையற்ற கூட்டங்கள். அவர் எந்த ஊருக்கு சென்றாலும் அதே கூட்டம் மட்டுமே அவரை பின்தொடர்கிறது. ஊடகங்கள் துணையுடன் சனிக்கிழமை நாடகங்களை நடத்தி வருகிறார். இது நீண்ட நாள் நீடிக்காது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் 53 சதவீத உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. வரும் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி, அனைத்து பூத்துகளிலும் உறுதிமொழி ஏற்கப்படும். வரும் 17ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் வரும் 20ஆம் தேதி விழுப்புரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும். ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வோம்” என்றார்.


















