மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து மீண்டும் அவருடன் இணைந்ததாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் மயில் ஆடும் துறை என்று ஊர் பெயர் பெற்றது. இவ்வாலயத்தில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 7ஆம்தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு ஐந்தாம் நாள் திருவிழாவாக துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக மயிலம்மன் பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு இரவு மாயூரநாதர் ஆலய சன்னதியில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு சுவாமி அம்பாள் மாயூரதாண்டவம் கெளரிதாண்டவம் ஆடிய நிகழ்வு புராணவரலாறு படி நடைபெற்றது. பின்னர் நடராஜர் சன்னதியில் மயில் உருவில் கொளரி தாண்டவகாட்சியோடு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் அபயாம்பிகை அம்மன் சாபவிமோசனம் நீங்கி அம்பிகை உருவம் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரதனை சோடச தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மயிலம்மன் பூஜையை கண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 13ஆம்தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ஆம்தேதி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருத்தேரோட்டமும், 16ஆம்தேதி புகழ்பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


















