ஸ்பிரிங்டேல் பள்ளியில் உன்னதமான ‘நிலாச்சோறு’ திருவிழா

 ஈரோடு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டியில் இயங்கி வரும் முன்னணி சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனமான ஸ்பிரிங்டேல் பப்ளிக் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரியப் பொங்கல் திருநாள் மற்றும் அழிந்து வரும் கூட்டுணவுப் பண்பாடான ‘நிலாச்சோறு’ திருவிழா ஆகிய இரண்டும் மிகக் கோலாகலமாக ஒருங்கிணைத்துக் கொண்டாடப்பட்டன. பள்ளி வளாகம் முழுவதும் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்து நிலவொளியில் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அமர்வதற்கு வட்ட வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. நவீனக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நமது தொன்மையான வாழ்வியல் முறைகளை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த விழா வடிவமைக்கப்பட்டிருந்தது.

விழாவின் தொடக்கமாகப் பள்ளி முதல்வர் பிரேமா வரவேற்புரை ஆற்ற, பள்ளி நிறுவனர் நாகராஜ், தாளாளர் கிஷோர்கனி மற்றும் அறங்காவலர்கள் சாதனா, தேன்மொழி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். இறைவனுக்கும், வாழ்வாதாரமான இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாகப் பாரம்பரிய முறையில் பொங்கலிடும் நிகழ்வு நடைபெற்றது. முற்றத்தில் மண் அடுப்பு கூட்டி, புதுப்பானையில் புத்தரிசி, பசும்பால் மற்றும் வெல்லம் இட்டு, ஏலம், முந்திரி, திராட்சை மணக்கப் பொங்கல் வைக்கப்பட்டது. பானையில் பொங்கல் பொங்கி வரும்போது அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி பொங்க முழக்கமிட, அனைவருக்கும் இனிப்பான சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த விழாவின் சிறப்பம்சமாகப் பெற்றோர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அன்றாடப் பணிச்சுமையிலிருந்து விடுபடும் வகையில், பெற்றோர்கள் ஆர்வத்துடன் முட்டை உடைத்தல், பலூன் உடைத்தல், விறுவிறுப்பான கயிறு இழுத்தல் மற்றும் தம்பதியருக்கான ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் பங்கேற்றனர். மேலும், மேடை ஏறிப் பாடல் பாடுதல், நடனம் மற்றும் கவிதை வாசிப்பு எனப் பெற்றோர்கள் தங்களது மறைந்திருந்த கலைத்திறன்களை வெளிப்படுத்தியது விழாவிற்குப் புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. அத்துடன், அகன்ற திரையில் பள்ளியின் சாதனைத் தொகுப்புகள், மாணவர்களின் களப்பயணங்கள் மற்றும் கல்விச் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுப் பெற்றோர்களின் பாராட்டைப் பெற்றன.

விழாவின் இறுதி நிகழ்வாக, இன்று அருகி வரும் பழக்கமான “நிலாச்சோறு” நிகழ்ச்சி உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. நிலவொளியின் கீழ் அமர்ந்து, பெற்றோர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த ஆரோக்கியமான உணவுகளைப் பிற குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். இந்தத் தலைமுறை மாணவர்கள் கூட்டுணவின் மகத்துவத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் நேரடியாகக் கற்றுக் கொண்டனர். உறவுகளுக்கு இடையே பிணைப்பை உண்டாக்கும் இத்தகைய அரிய வாய்ப்பினை ஏற்படுத்திய பள்ளி நிர்வாகத்திற்குப் பெற்றோர் சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக நல்லிணக்கத்தையும் குடும்ப உறவுகளையும் வலுப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.

Exit mobile version