தேனி மாவட்டம் போடியிலிருந்து கேரளா மாநிலம் மூணாறு மற்றும் பூப்பாறை செல்லும் மலைச்சாலையில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ‘தென்னகத்து காஷ்மீர்’ என்று சுற்றுலாப் பயணிகளால் வர்ணிக்கப்படும் மூணாறுக்குச் செல்லும் பிரதான நுழைவு வாயிலாகப் போடிமெட்டு மலைப்பாதை திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,644 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில், குளிர்காலத்தின் உச்சமாக தற்போது பனிமூட்டம் தரையிறங்கியுள்ளது. இதனால் போடிமெட்டு, குரங்கணி, டாப்ஸ்டேஷன், கொழுக்குமலை மற்றும் கேரளப் பகுதிகளான பூப்பாறை, நெடுங்கண்டம், புளியமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் பனித்திரைக்குள் மூழ்கியுள்ளன.
தற்போது மாலை 5:00 மணிக்கே தொடங்கும் பனிப்பொழிவு, மறுநாள் காலை 10:00 மணி வரை நீடிக்கிறது. சில நேரங்களில் பனிமூட்டம் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், சில அடி தூரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத சூழல் நிலவுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பலரும் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிடாமல் செல்வது பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைவுகள் நிறைந்த இந்தப் பாதையில், எதிரே வரும் வாகனங்கள் இருப்பதை அறிய முடியாமல் ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக, அதிகாலை நேரங்களில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் மற்றும் கேரளாவிற்குத் தோட்ட வேலைக்குச் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகளை (Fog lamps) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறுபுறம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மூணாறு மற்றும் போடிமெட்டு நோக்கிச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. போடிமெட்டு மலைப்பாதையில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் மேகக் கூட்டங்களுக்கு இடையே பயணிக்கும் சுகமான அனுபவத்தை அனுபவிக்கத் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். மலைப்பாதையின் இயற்கை அழகைச் ரசித்தபடி, ஆபத்தான வளைவுகளைப் பொருட்படுத்தாமல் அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மலைப்பாதையின் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பனிமூட்ட நேரங்களில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

















